ஞானி 3 - 5. மனோவசியம்

ஞானி 3 - 5. மனோவசியம்

The Practice of Hypnotism எனும் புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டிருந்தேன். ஞானி உள்ளே நுழைந்தான். 

வா ஞானி.

நலமா?

நலம் தான்.

என்ன படித்துக் கொண்டிருக்கிறாய்?

இதோ -- என்று புத்தகத்தை காட்டினேன். 

அவன் புரட்டிக் கொண்டிருந்தான். மனோவசியம் மூளை சலவை இதெல்லாம் சாத்தியமா என்று ஆவலாக கேட்டேன்.

லட்சம் பேர் இருக்கும் கூட்டத்தை தன் பேச்சால் மயக்கி ஒரே நேரத்தில் கைதட்ட வைக்கிறானே அரசியல் வாதி அவன் பெரிய மனோதத்துவ நிபுணன். தன் குடும்பம் மனைவி மக்கள் இவர்கள் என்ன ஆவார்கள் என்று கூட யோசிக்காமல் ஒரு தலைவன் சொல்கிறான் என்று தீக்குளிக்கிறார்களே பல முட்டாள்கள் அந்த தலைவன் ஒரு மனோதத்துவ நிபுணன். ஒரு சொட்டு திரவம் ஊற்றினால் ஒரு பக்கெட் துணியை வெளுக்கலாம் என்று விளம்பரம் செய்து ஏமாற்றுகிறானே அந்த வியாபாரி அவன் செய்வது மூளை சலவை தான். 

எதிர்கட்சி ஊடகங்களில் நம் நாட்டில் பட்டப்பகலில் கொள்ளையும் கொலையும் கற்பழிப்பும் நடப்பது போல் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்களே அவர்கள் செய்வதும் மூளை சலவை தான். ஆளுங்கட்சி ஊடகத்தில் நம் நாட்டில் தெருக்களில் பாலும் தேனும் ஓடுவதாகவும் அனைவரும் தங்கமும் வெள்ளியும் சாப்பிடுவதாகவும் சொல்கிறார்கள் அவர்கள் மனோதத்துவ நிபுணர்கள் தான்.

இவையெல்லாம் தெரிந்தும் சாத்தியமா என்று கேட்கிறாயே?

அது சரி ஞானி, இதிலிருந்து எப்படி தப்புவது?

ஏன் தப்ப வேண்டும்?

அரசியல்வாதிகளும் வியாபாரிகளும் சுயநலத்தினால் தானே அவ்வாறு மூளைச்சலவை செய்கிறார்கள். அதிலிருந்து தப்ப வேண்டாமா?

ஆம். அவசியம் தப்ப வேண்டும்.

அதற்கு என்ன செய்வது?

அதையும் நானே சொல்லிவிட்டால் நான் உன்னை மூளை சலவை செய்ததாகிவிடாதா? போ, நீயே அதற்கு ஒரு வழி கண்டுபிடி.

பிறகென்ன செய்தான் என்று வெகுநாட்களாக ஞானி படிக்கும் உங்களிடமும் சொல்ல வேண்டுமா? மின்னல் போல் காற்றில் மறைந்தான் ஞானி.

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி