ஞானி பாகம் 5 - 2 வாக்கு

2. வாக்கு



வழக்கம் போலக் கோவில் வாசலில் சோனி. இரண்டு ரூபாய் எடுத்துப் போட்டேன்.

"விலைவாசி ஏறிடுச்சு இன்னும் இரண்டு ரூபாயே போடறே".

"அது சரி விலைவாசி ஏற நானா காரணம். அதை அரசாங்கத்திடம் கேட்கனும்" என்று சிரித்துக் கொண்டே பையில் இருந்த ஐந்து ரூபாய் நோட்டை எடுத்தேன்.

"அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கற பொறுப்பு மக்கள் கிட்டே தானே இருக்கு" என்றான்.

"அட, நாம எங்க தேர்ந்தெடுக்கறோம். அவங்களா ஜெயிச்சு வந்திடறாங்க".

"அதெப்படி நீ ஓட்டு போடறதில்லையா".

"இல்லப்பா. நான் ஓட்டு போட்டா மாத்திரம் நிலைமை மாறப் போவுதா".

"ஏன் மாறாது".

"அப்ப நீ ஓட்டு போடறியா".

"ஆமாம்".

"அட" என்று என் ஆச்சர்யம் நீடிக்கும் முன் ஆதார் அட்டை வாக்காளர் அட்டை என்று எடுத்து நீட்டினான்.

"அடே இதெல்லாம் வைச்சிருக்கியா எப்படிக் கிடைச்சுது".

"கோவில் அட்ரெஸ் தான்" என்றான்.

"யாருக்கு ஓட்டுப் போட்டே" என்ற வெகுளியாகக் கேட்டேன்.

சட்டென்று முறைத்தான்.

"அது சரி நீ ஏன் ஓட்டுப் போடலே" என்றான்.

என்னிடம் பதில் இல்லை.

"உன்னை மாதிரி படிச்சு விவரம் தெரிஞ்சவங்க ஓட்டுப் போடலைன்னா படிக்காத மக்கள் இலவசங்களைப் பார்த்து தான் ஓட்டுப் போடுவாங்க. அப்புறம் விலைவாசி ஏறினதுக்கு நீ அரசாங்கத்தைக் குறை சொல்றே. உங்களமாதிரி ஆளுங்களாலே தான் என் மாதிரி பிச்சைக்காரங்க உருவாகறாங்க. அப்புறம் எங்களுக்குப் பிச்சை போட்டா புன்னியம் வந்துடுமா. போ, போ, அடுத்தத் தேர்தல்லையாவது ஓட்டுப் போடு. முடிஞ்சா எங்க தலைவிதியை மாத்து. உன் தலைவிதியும் மாறும்" என்றான்.

கன்னம் வீங்குவது போல் இருந்தது. அவசரமாக அங்கிருந்து நழுவினேன். "இந்தத் தேர்தலுக்காவது வீட்டில் தூங்காமல் ஓட்டுப் போடுவேன்" என்று சபதம் எடுத்துக் கொண்டேன்.

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்